சனி, 17 அக்டோபர், 2009

E-Learning - தொடக்கநிலை 5 உயர்தமிழ்

சுயவிடைக் கருத்தறிதல்

பின்வரும் பகுதியைக் கருத்தூன்றிப் படி.

குருடர்கள் எதையும் செய்ய முடியாதவர்கள்; மற்றவர்களுக்குப் பயன்படாதவர்கள் என்ற எண்ணங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடையே இருந்தன. அக்காலங்களில் அவர்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்து வாழ்ந்தனர். ஆனால், 1771-இல் குருடர்களால் படிக்கவும் சிறப்பாக வாழவும் முடியும் என்பதை வாலண்டின் என்பவர் நிரூபித்தார்.

அவர் ஒருநாள் ஒரு கேளிக்கைச் சந்தையில் குருடர்கள் சிலர் கேலி செய்யப்டுவதைப் பார்த்தார். இந்நிகழ்ச்சி அவர் மனத்தைப் பெரிதும் பாதித்தது. குருடர்கள் அனுபவிக்கும் இன்னல்களை அவர் உணர்ந்தார். மனம் கலங்கிய அவர் தம் வாழ்நாளை குருடர்களின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்வின் உயர்வுக்காகவும் அர்பணிக்க முடிவெடுத்தார்.

அவர் ஒருநாள் பிரான்சுவா என்ற பார்வையற்ற சிறுவனைக் கண்டார். அவன் ஒரு சாலையோரமாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வாலண்டின் அவனுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுக் கவனித்தார். விரல்களால் தொட்டு உணர்வதில் குருடர்களுக்கு அதிக ஆற்றல் இருப்பதை அவர் உணர்ந்தார். அத்திறமையை மேலும் வளர்க்க விரும்பினார். கட்டைகளில் எழுத்துக்களைச் செதுக்கி அவற்றைத் தொட்டு உணர்ந்து படிக்க அச்சிறுவனைப் பழக்கினார். இந்த முறையை விடச் சிறந்த ஒரு முறையை எதிர்பாராத விதமாக அவர் கண்டுபிடித்தார்.

ஒருநாள் பிரன்சுவா மேசையில் இருந்த பொருள்களை அடுக்கினான். அப்போது தடித்து மேலெழுந்த அச்சுக்களைக் கொண்ட ஒரு அட்டையை அவன் ஆர்வத்துடன் கைவிரல்களால் தொட்டுப் படிக்க முயல்வதைக் கண்டார். இதன் பிறகு அவர் இதைப் போன்ற அச்சுக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு குருடர்களின் கல்விக்கு வழிவகுத்தார். குருடர்களுக்காக அரசாங்கத்தின் உதவியுடன் பள்ளிக்கூடமும் அமைத்தார். குருடர்களுக்குப் படிக்கவும் எழுதவும் இசைக்கருவிகள் இசைக்கவும் இவர் கற்றுக் கொடுத்தார். பிற்காலத்தில் இவர் ` குருடர்களின் தந்தை` என போற்றப்பட்டார்.


Q1 முதல் Q6 வரையுள்ள வினாக்களுக்கு மேற்கண்ட பகுதியிலிருந்து விடைகளைக் கண்டிறிந்து, Foolscap தாளில் உன் விடைகளை எழுதுக. (22 மதிப்பெண்கள்)

Q1. முற்காலத்தில் மக்கள் குருடர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள்? (3 மதிப்பெண்கள்)

Q2. வாலண்டின் எப்போது குருடர்களுக்குத் தம் வாழ்நாளை அர்பணிக்க முடிவு செய்தார்? (4 மதிப்பெண்கள்)

Q3. பிரான்சுவாவின் செயல்கள் வாலண்டினுக்கு எதை உணர்த்தின? (4 மதிப்பெண்கள்)

Q4. குருடர்களின் கல்விக்காக எப்படிப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன? (4 மதிப்பெண்கள்)

Q5. வாலண்டின் ஏன் `குருடர்களின் தந்தை` என்று போற்றப்பட்டார்? (4 மதிப்பெண்கள்)

Q6. வாலண்டின் குருடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? (3 மதிப்பெண்கள்)

Q7. பொருள் எழுது (4 மதிப்பெண்கள்)

பின்வரும் சொற்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பொருளை உணர்த்தும் வேறொரு சொல்லை எழுது.

அ. இன்னல்களை - _____________________ (2 மதிப்பெண்கள்)

ஆ. ஆர்வத்துடன் - _____________________ (2 மதிப்பெண்கள்)


(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக