வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 25/01/2010

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் வரலாற்றில் முதன்முறையாகத் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) ஜனவரி மாதம் 25-ஆம் தேதியன்று நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குத் ‘தமிழில் பேசுவோம்; தமிழை நேசிப்போம்’ என்னும் தலைப்பில் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. நம் பள்ளியில் உள்ள தமிழ் பேசக்கூடிய ஆங்கில மொழி ஆசிரியர்கள் சிலர் தமிழ் பேசுவதை மாணவர்கள் படச்சுருள் வாயிலாகக் கேட்டார்கள். தமிழைப் பேசுவதில் பெருமிதம் கொள்ளவேண்டும், தமிழில் பயமின்றி அதிகமாகப் பேச வேண்டும், அதனை வெட்கப்படாமல் பேச வேண்டும் எனப் பல்வேறு கருத்துக்கள் அப்படச்சுருளின்வழி மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர், செல்வி. கீதா அவர்கள், மாணவர்களிடம் உரையாற்றினார். தங்களின் தலைமையாசிரியர் தமிழில் எந்தப் பயமும் வெட்கமும் இல்லாமல் சரளமாகத் தமிழில் பேசுவதைக் கண்ட மாணவர்களுக்குத் தாங்களும் அவ்வாறு தமிழில் பேசவேண்டும் என்ற முனைப்பும் ஆர்வமும் ஏற்பட்டதை அவர்களின் முகங்கள் நன்கு வெளிப்படுத்தின. மொத்தத்தில், மாணவர்கள் அனைவரும் தமிழ்மொழியை அதிகமாகப் பயன்படுத்த இது போன்ற மாணவர்க்கூட்டம் வழிவகுக்கும் என்பது திண்ணம்.

அன்று மாணவர்களுக்குத் திரையிடப்பட்ட படச்சுருள்:
தமிழில் பேசுவோம். தமிழை நேசிப்போம்.

'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு'

இவ்வலைப்பூவில் அண்மையில் 'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு' என்ற வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில் தொடக்கநிலை 5 மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாக்களித்தார்கள்.


தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாகப் பல மாணவர்கள்  சடுகுடு/கபடி விளையாட்டுக்கே வாக்களித்திருந்தார்கள். அவ்வகுப்பு மாணவர்களில் பலரையும் அவ்விளையாட்டு வெகுவாகக் கவர்ந்தது எனலாம். அவ்விளையாட்டை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடியபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு....