செவ்வாய், 20 அக்டோபர், 2009

தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்!

தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் காலம் இது.

உங்கள் நேரத்தை நல்வழியில் வகுத்து உங்களின் பாடத்திருப்பங்களை நல்ல முறையில் செய்திடுங்கள்.

உங்களின் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!

வெற்றி உங்களுக்கே! 

உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய எங்களுடைய இனிய நல்வாழ்த்துக்கள்!


Source (மூலம்):
Youtube - http://www.youtube.com/watch?v=qIR66btW3u8

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தித்திக்கும் நன்னாளில்

தீமைகள் நீங்கி

நன்மைகள் பெருகட்டும்

தீப ஒளியில் மத்தாப்பூ போல

மகிழ்ச்சி பரவட்டும்

மங்களம் பெருகட்டும்

இன்பத் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அனைத்து இந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தமிழ்க் கருத்தறிதல் பட்டறை

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு தொடக்கநிலை 4 மற்றும் தொடக்கநிலை 5 மாணவர்களுக்கு 06-10-2009 அன்று பள்ளியில் கருத்தறிதல் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரண்டு மணி நேரப் பட்டறையில் ‘ஏன்’, ‘எவ்வாறு’ முதலிய கேள்வி வகைகள் குறித்தும் அக்கேள்வி வகைகளுக்குப் பதிலளிக்கும் உத்திகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. இப்பட்டறையின்போது, மாணவர்கள் பகுதிகளிலிருந்து பதில்களை அடையாளம் காணுதல், அவற்றைக் கேள்வி வகைக்கு ஏற்ப பதிலளித்தல் முதலிய நடவடிக்கைகளில் தங்கள் குழுக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.



சனி, 17 அக்டோபர், 2009

E-Learning - தொடக்கநிலை 5 தமிழ்

கட்டுரை

பின்வரும் படத்தொடரை அடிப்படையாகக் கொண்டு, 100 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது. படத்தொடரின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் நீ இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உதவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீ உன் கட்டுரையை Foolscap தாளில் எழுதவும்.



சுயவிடைக் கருத்தறிதல்
பின்வரும் பகுதியைக் கருத்தூன்றிப் படி.

குமரவேல் மிகவும் அ‎ன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தா‎ன். அவ‎ன் த‎ன்னுடைய வறுமை நிலையின் காரணமாக, ஒரு சமயம் த‎ன்னுடைய நாயை ஒரு செல்வந்தரிடம் அடுகு வைத்து ஐந்நூறு வெள்ளி கடன் வாங்கினான். நாய் அச்செல்வந்தரிடம் ‏‏வளர்ந்தது.

சில நாட்கள் சென்றன. ஒரு நாள் கள்வர்கள் சிலர் செல்வந்தருடைய வீட்டில் களவாடச் செ‎‎ன்றனர். கள்வர்கள் அச்செல்வந்தருடைய வீட்டை நெருங்கிய சமயத்தில், அந்த நாய் குரைத்து எல்லோரையும் எழுப்பியது. நாய் கள்வர்கள் மீது பாய்ந்து கடித்து அவர்களைத் துரத்தியது. கள்வர்கள் தப்பினால் போதும் எ‎ன்று ஓடிவிட்டனர்.

நாயின் செயல் அச்செல்வந்தருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. உடனே அவர் ஒரு காகிதத்தில், “நாய் நேற்றிரவு எ‎ன் வீட்டில் களவாடுவதற்கு வந்த கள்வர்களைக் கடித்துத் துரத்தியதுட‎ன் எ‎ன்னையும் எழுப்பிவிட்டது. அதனுடைய செய்கையால் எ‎ன் செல்வம் களவு போகாமல் தப்பியது. நாய் செய்த ‏‏‏இப்பேருதவிக்காக, நா‎ன் உனக்குக் கடனாகக் கொடுத்த ஐந்நூறு வெள்ளியையும் உனக்கு ந‎ன்கொடையாக்கி விட்டே‎ன். இனி, நீ எனக்குக் கடன் தொகையைக் கொடுக்க வேண்டியதில்லை.” எ‎ன்று எழுதி, நாயின் கழுத்தில் அதை வைத்துக் கட்டி, அதனுடைய தலைவனிடம் செல்லுமாறு அதற்குக் குறிப்பு காட்டினா‎ர். நாயும் அவ்வாறே குமரவேலிடம் செ‎ன்றது.

குமரவேல், த‎ன்னுடைய நாயி‎ன் வருகையைக் கண்டு, ‏இந்நாய் செல்வநதரை ஏமாற்றி விட்டு வந்து விட்டது எ‎ன்று எண்ணிக் கடுங்கோடம் கொண்டா‎ன். உடனே ஒரு தடியை எடுத்து நாயி‎ன் மண்டையில் ஓங்கி அடித்தா‎ன்.

நாய் ‏‏இறந்து வீழ்ந்தது. அத‎ன் கழுத்தில் ‏‏இருந்த சீட்டை எடுத்து அவ‎ன் படித்துப் பார்த்தா‎ன். செய்தியை அறிந்ததும், குமரவேல் சிந்தை கலங்கிக் கண்ணீர் வடித்தான். எப்பொழுதும், எதையும் சிந்தித்துப் பார்த்துவிட்டுச் செயல்படும்போதுதான் அசம்பாவிதங்கள் நிகழாமல் ‏‏இருக்கும். ‏‏‏இந்த உண்மையை நாமும் உணர்ந்து கொண்டால் குமரவேலின் கதி நமக்கு ஏற்படாமல் ‏‏இருக்கும். ‏‏

Q1 முதல் Q6 வரையுள்ள வினாக்களுக்கு மேற்கண்ட பகுதியிலிருந்து விடைகளைக் கண்டிறிந்து, Foolscap தாளில் உன் விடைகளை எழுதுக. (20 மதிப்பெண்கள்)

Q1 குமரவேல் எவ்வாறு தன்‎ வறுமையைச் சமாளிக்க எண்ணினான்?
                                                                                                                             (3 மதிப்பெண்கள்)

Q2 கள்வர்கள் வீட்டை நெருங்கியதும் நாய் எ‎ன்ன செய்தது?
                                                                                                                              (3 மதிப்பெண்கள்)

Q3 மகிழ்ச்சியடைந்த செல்வந்தர் குமரவேலுக்கு அனுப்பிய குறிப்பில்
      என்ன எழுதினார்‎? (4 மதிப்பெண்கள்)

Q4 குமரவேல் ஏ‎ன் கடுங்கோபம் அடைந்தான்? (3 மதிப்பெண்கள்)

Q5 குமரவேலின் கடுங்கோபத்தால் என்ன நிகழ்ந்தது?
                                                                                                   (4 மதிப்பெண்கள்)

Q6 ‏இக்கதை நமக்கு எதை உணர்த்துகிறது? (3 மதிப்பெண்கள்)



முற்றும்

(*குறிப்பு: பயிற்சிநூலிலுள்ள மொழிப்பாடப்பயிற்சி 2-ஐ செய்திட மறந்திடாதீர்கள்!)

E-Learning - தொடக்கநிலை 5 உயர்தமிழ்

சுயவிடைக் கருத்தறிதல்

பின்வரும் பகுதியைக் கருத்தூன்றிப் படி.

குருடர்கள் எதையும் செய்ய முடியாதவர்கள்; மற்றவர்களுக்குப் பயன்படாதவர்கள் என்ற எண்ணங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடையே இருந்தன. அக்காலங்களில் அவர்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்து வாழ்ந்தனர். ஆனால், 1771-இல் குருடர்களால் படிக்கவும் சிறப்பாக வாழவும் முடியும் என்பதை வாலண்டின் என்பவர் நிரூபித்தார்.

அவர் ஒருநாள் ஒரு கேளிக்கைச் சந்தையில் குருடர்கள் சிலர் கேலி செய்யப்டுவதைப் பார்த்தார். இந்நிகழ்ச்சி அவர் மனத்தைப் பெரிதும் பாதித்தது. குருடர்கள் அனுபவிக்கும் இன்னல்களை அவர் உணர்ந்தார். மனம் கலங்கிய அவர் தம் வாழ்நாளை குருடர்களின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்வின் உயர்வுக்காகவும் அர்பணிக்க முடிவெடுத்தார்.

அவர் ஒருநாள் பிரான்சுவா என்ற பார்வையற்ற சிறுவனைக் கண்டார். அவன் ஒரு சாலையோரமாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வாலண்டின் அவனுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுக் கவனித்தார். விரல்களால் தொட்டு உணர்வதில் குருடர்களுக்கு அதிக ஆற்றல் இருப்பதை அவர் உணர்ந்தார். அத்திறமையை மேலும் வளர்க்க விரும்பினார். கட்டைகளில் எழுத்துக்களைச் செதுக்கி அவற்றைத் தொட்டு உணர்ந்து படிக்க அச்சிறுவனைப் பழக்கினார். இந்த முறையை விடச் சிறந்த ஒரு முறையை எதிர்பாராத விதமாக அவர் கண்டுபிடித்தார்.

ஒருநாள் பிரன்சுவா மேசையில் இருந்த பொருள்களை அடுக்கினான். அப்போது தடித்து மேலெழுந்த அச்சுக்களைக் கொண்ட ஒரு அட்டையை அவன் ஆர்வத்துடன் கைவிரல்களால் தொட்டுப் படிக்க முயல்வதைக் கண்டார். இதன் பிறகு அவர் இதைப் போன்ற அச்சுக்களைக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு குருடர்களின் கல்விக்கு வழிவகுத்தார். குருடர்களுக்காக அரசாங்கத்தின் உதவியுடன் பள்ளிக்கூடமும் அமைத்தார். குருடர்களுக்குப் படிக்கவும் எழுதவும் இசைக்கருவிகள் இசைக்கவும் இவர் கற்றுக் கொடுத்தார். பிற்காலத்தில் இவர் ` குருடர்களின் தந்தை` என போற்றப்பட்டார்.


Q1 முதல் Q6 வரையுள்ள வினாக்களுக்கு மேற்கண்ட பகுதியிலிருந்து விடைகளைக் கண்டிறிந்து, Foolscap தாளில் உன் விடைகளை எழுதுக. (22 மதிப்பெண்கள்)

Q1. முற்காலத்தில் மக்கள் குருடர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள்? (3 மதிப்பெண்கள்)

Q2. வாலண்டின் எப்போது குருடர்களுக்குத் தம் வாழ்நாளை அர்பணிக்க முடிவு செய்தார்? (4 மதிப்பெண்கள்)

Q3. பிரான்சுவாவின் செயல்கள் வாலண்டினுக்கு எதை உணர்த்தின? (4 மதிப்பெண்கள்)

Q4. குருடர்களின் கல்விக்காக எப்படிப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன? (4 மதிப்பெண்கள்)

Q5. வாலண்டின் ஏன் `குருடர்களின் தந்தை` என்று போற்றப்பட்டார்? (4 மதிப்பெண்கள்)

Q6. வாலண்டின் குருடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? (3 மதிப்பெண்கள்)

Q7. பொருள் எழுது (4 மதிப்பெண்கள்)

பின்வரும் சொற்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பொருளை உணர்த்தும் வேறொரு சொல்லை எழுது.

அ. இன்னல்களை - _____________________ (2 மதிப்பெண்கள்)

ஆ. ஆர்வத்துடன் - _____________________ (2 மதிப்பெண்கள்)


(முற்றும்)

வெள்ளி, 2 அக்டோபர், 2009

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்...



தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்வார்கள்.
ஆனால், முதலில் நீ உன்னிடத்திலேயே நம்பிக்கை வை. அதுதான் முன்னேற வழி.
எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன.
அதை உணர்ந்து அந்த ஆற்றலை நீ வெளிபடுத்து.
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாக ஆகிவிடும்.'
- சுவாமி விவேகானந்தர்

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.

சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்!

எங்கள் மாணவச் செல்வங்களுக்கு எங்களின் இதயங்கனிந்த சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்!


எங்களின் வாழ்த்துச் செய்தி:



வியாழன், 1 அக்டோபர், 2009

இம்மாதத்தின் பொன்மொழி

"காலம் பொன்னைவிட அதிக மதிப்புடையது.

பொன்னை இழந்துவிட்டால் மீண்டும் சம்பாதித்து

விடலாம். ஆனால், காலம் நம்மை விட்டு

ஓடிவிட்டால் அதனை மீட்கவும் முடியாது;மீண்டும்
 
பெறவும் முடியாது."

- சாமுவேல் ஜான்சன்

இம்மாதத்தின் குறள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.


‘இவர் இந்த மகனைப் பெறுவதற்கு என்ன தவம்


 செய்தாரோ’, என்று பிறர் புகழ்ந்து பேசுமாறு மகன் தன்

தந்தைக்கு நற்பெயரைத் தேடித் தர வேண்டும்.

இம்மாதத்தின் விடுகதை

திறந்து திறந்து மூடும்.

ஆனால் ஒலி வராத கதவுகள்.

அவை என்ன?


கண்டுபிடியுங்கள்....

விடை தெரிந்தால் உங்கள் ஆசிரியரிடம் கூறவும்!