வியாழன், 27 மே, 2010

விடுமுறைக்கான விடுகதைகள்! கண்டுபிடி! கண்டுபிடி!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் மீண்டும் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்கள் பதில்களை இப்போதே நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்

(2) நாக்கு
(3) எலும்பு

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

புதன், 26 மே, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள்

அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள் இது.
பார்த்து, ரசித்து, கேட்டு மகிழுங்கள்!

செவ்வாய், 25 மே, 2010

சென்ற மாத விடுகதைகளும் பதில்களும்

மாணவர்களே இதோ சென்ற மாத விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?

(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்

2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?

(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்

3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?

(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  1. பாத்திமா (5B)
  2. சௌந்தர்யா (6A)
மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இவ்விரண்டு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

விடுமுறை வந்துவிட்டது!

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயா?
பொறுமை கடலினும் பெரிது.
அப்படியென்றால் நேரத்தை வீணாக்காதே
ஏனெனில் வாழ்க்கையின் மூலதனமே நேரந்தான்.
                                                                       - மேல்நாட்டு அறிஞர் ஒருவர்

தேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட தமிழாசிரியர்கள் எங்கள் ஐவரின் இனிய நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 20 மே, 2010

இணையம் வழிக் கற்றல் தினம் (E-Learning Day) - 24/05/2010

24/05/2010 பள்ளியில் இணையம் வழிக் கற்றல் தினம் (E-Learning Day). அதனை முன்னிட்டு, தொடக்கநிலை மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான இணையம் வழிக் கற்றல் பாடங்கள் இவ்வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளன. வலப்புறத்தில் காணப்படும் 'E-Learning தினப் பாடங்கள் (24/05/2010)' என்பதன் கீழ்த் தோன்றும் உங்கள் வகுப்பின் மீது கிலிக் செய்து, உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ள பாடத்தைச் செய்யவும்.

இனிதே இணையம் வழிக் கற்றிடுவோம்!