திங்கள், 10 நவம்பர், 2014

தீபாவளிக் கொண்டாட்டம் 2014

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 21/10/2014 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது நம் தமிழ் மாணவர்களால் பலதரப்பட்ட அங்கங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டன. ஆடல், பாடல் என்று மாணவர்களின் குதூகலமான படைப்புகள் அனைவரையும் தாளம் போட வைத்தன. அந்தப் படைப்புகளுடன் தீபாவளி பற்றிய சில முக்கியத் தகவல்களும் கலைநிகழ்ச்சியின் போது அனைத்து மாணவர்களுக்கும் விளக்கப்பட்டன.

கலைநிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஆசிரியர்கள் படைத்த பங்கரா இந்திய நடனம் அமைந்தது. அது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த நடனத்தின் ஒரு சில அசைவுகளைக் கற்றுக்கொண்டதோடு, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தும் ஆடி மகிழ்ந்தார்கள்.

இவ்வாண்டு தீபாவளிக் கலைநிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத கலைநிகழ்ச்சியாக அமைந்தது எனலாம். நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களைச் சித்திரிக்கும் புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!


 
 







 



 



செவ்வாய், 30 செப்டம்பர், 2014

நல்லாசிரியர் 2014

தமிழாசிரியர்களைப் போற்றிக் கௌரவிக்கும் வகையில் 12வது ஆண்டாகத் தமிழ் முரசு நாளிதழ் செப்டம்பர் ஆறாம் தேதி அன்று நல்லாசிரியர் விருது 2014 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆதரவுடன் ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கல்வித் துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடக்க நிலை, உயர்நிலைப் பிரிவுகளில் மொத்தம் எட்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் தொடக்கநிலை பிரிவில் நம் பள்ளியின் தமிழாசிரியரான திரு.மோகன் சுப்பையா வெற்றி வாகை சூடினார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 








 


 

வியாழன், 4 செப்டம்பர், 2014

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 29/08/2014


29 ஆகஸ்ட் 2014 அன்று இவ்வாண்டின் இரண்டாம் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் அன்று காலை நடன அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

அங்கு, தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் பங்குபெற்ற என் கனவுக்கடை போட்டியில் இடம்பெற்ற ஒரு சில அங்கங்களும் படைப்புகளும் ஒளிப்பரப்பப்பட்டன. அதன் பிறகு, 'ஒரு நிமிடத்திறன்' அங்கத்தில் பங்குபெற்ற தங்கள் சக மாணவர்களின் படைப்புகளை அனைவரும் கண்டு மகிழ்ந்தார்கள். பங்கெடுத்த மாணவர்களுக்கு ஆரவாரமும் உற்சாகமும் கொடுத்த அதே வேளையில், அவர்களும் எப்படி இந்த அங்கத்தில் பங்குபெறலாம் என்பதைப் பற்றிய தகவல்களும் அன்று அவர்களுக்கு வழங்கப்பட்டன. 

விரைவிலேயே இன்னும் கூடுதலான மாணவர்களின் படைப்புகளையும் திறன்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
 

 

புதன், 13 ஆகஸ்ட், 2014

தேசிய தினக் கொண்டாட்டம் 2014

இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு, 08/09/2014 அன்று நம் பள்ளி கலைநிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதில் நமது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் பங்குபெற்று ஒரு விறுவிறுப்பான நடனத்தைப் படைத்தனர். இதோ அவர்களின் நடனத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

என் கனவுக்கடை 2014

4 ஜீலை 2014 அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான ராம், கிருபன், ஷார்லட், மணி, சாரா, முஹம்மது ஆகியோர் என் கனவுக்கடை 2014 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

இது நம்ம கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் அபாரமாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கே வெற்றி கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்!


அந்தப் போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: