வெள்ளி, 25 நவம்பர், 2011

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!

24/11/2011 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் மிகச்  சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், 100 விழுக்காட்டு சிறப்புத் தேர்ச்சியும் பெற்று, தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.


வெள்ளி, 28 அக்டோபர், 2011

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, 25/10/2011 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது படைக்கப்பட்ட அங்கங்கள் அனைத்தும் பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்களும் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

நிகழ்ச்சியின் முதல் நடனமாகத் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவி, சினேஹா படைத்த பாரம்பரிய நடனம் அனைவரையும் ஈர்த்தது:


நிகழ்ச்சியின்போது டேவிட், டையனா, பிராயன், எல்வின் ஆகியோர் படைத்த விறுவிறுப்பான ஆட்டம் அனைவரையும் தாளம் போட வைத்தது.




நிகழ்ச்சியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் படைத்த துடுப்புமிக்க நடனமும்  அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.



பள்ளிக்கு வருகை தந்த 'பாங்கரா' (Bhangara) நடனக் குழு படைத்த இரண்டு ஆட்டம் போட வைக்கும் நடனங்கள்  நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன. அவர்களுடைய நடனங்கள் பள்ளியில் இருந்த அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தன.


பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் 'பாங்கரா' (Bhangara) நடனக் குழுவினர்களுடன் இணைந்து அந்நடனத்தை ஆட முற்பட்டனர். இது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


 நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


 





 













மொத்தத்தில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

வியாழன், 6 அக்டோபர், 2011

தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்!

தேர்வுகள் காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் நேரத்தை நல்வழியில் வகுத்து உங்களின் பாடத்திருப்பங்களை நல்ல முறையில் செய்திடுங்கள்.
உங்களின் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!
வெற்றி உங்களுக்கே! 

உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய எங்களுடைய இனிய நல்வாழ்த்துகள்!




Source (மூலம்):
Youtube - http://www.youtube.com/watch?v=SQZfA7X6FZ4)

சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

இன்று சிறுவர் தினம்.

தொடக்கநிலை ஒன்று முதல் தொடக்கநிலை ஆறு வரை பயிலும் எங்கள் மாணவச் செல்வங்களுக்குத் தமிழாசிரியர்கள் ஐவரின் இதயங்கனிந்த சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

திங்கள், 26 செப்டம்பர், 2011

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

 
தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.

'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புத்தான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


 
 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்களது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

இந்த நீண்ட விடுமுறையை உங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இனிதே கழித்திடுங்கள்!


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வண்ணமயமான இன நல்லிணக்க நாள்

21 ஜீலை மாதம் அன்று பள்ளியில் இன நல்லிணக்க நாளை முன்னிட்டு, மாணவர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளைப் பள்ளிக்கு அணிந்துவந்தார்கள். அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:



வெள்ளி, 29 ஜூலை, 2011

தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி 2011

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாக S2 குழுமத் தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி ஒன்றுக்கு இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்தது. S2 குழுமத்தில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்லூடகப் பயிற்றுவளங்களை உருவாக்குவதில் தங்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்காகவும் S2 குழுமத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான ஒளிப்பகுதிகளைத் தயாரித்துப் பெருக்குவதற்காகவும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் போட்டி இவ்வாண்டு தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டி பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் 14 ஜூலை 2011 அன்று நடைபெற்றது. போட்டிக்கு நீதிபதிகளாகத் தேசிய கல்விக் கழகத்தின் இணை பேராசிரியர் முனைவர் A Ra சிவகுமாரன் அவர்களும் கல்வி அமைச்சின் கல்வித் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த தயாரிப்பாளர், திரு செல்வராஜூ அவர்களும் வருகை தந்திருந்தனர்.
போட்டிக்கு மொத்தம் ஐந்து பள்ளிகளிலிருந்து படைப்புகள் வந்திருந்தன. அந்தப் பள்ளிகள்:

·        குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி
·        பெய் தொங் தொடக்கப்பள்ளி
·        நியூ டவுன் தொடக்கப்பள்ளி
·        ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி
·        பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி

படைப்புகள் யாவும் மாணவர்களின் தயாரிப்பாக இருந்தன. ஒவ்வொரு படைப்பும் ஒரு விளம்பரத்தைக் காட்டும் படச்சுருளாக அமைந்தது.

போட்டியில் நியூடவுன் தொடக்கப்பள்ளி வெற்றி வாகை சூடியது. பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி இரண்டாம் நிலையிலும், ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி மூன்றாம் நிலையில் வந்தன. குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியும் பெய் தொங் தொடக்கப்பள்ளியும் ஆறுதல் பரிசுகள் பெற்றன.

எங்களுக்கு ஆதரவு அளித்து இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிய அனைத்துப் பள்ளிகளுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு:


 



 







 





திங்கள், 25 ஜூலை, 2011

தொடக்கநிலை 6 மாணவர்களுக்கான பயிலரங்கு

22/06/2011 அன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காகத் தொடக்கநிலை இறுதியாண்டுத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராகும் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இந்த இரண்டு மணி நேர பயிலரங்கின் போது, மாணவர்கள் தங்களின் தமிழ்த் தேர்வில் உள்ள வாய்மொழி, கட்டுரை, வேற்றுமை என ஒவ்வொரு கூறுக்கும் எவ்வாறு தங்களைத் தயார் படித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார்கள். இப்பயிலரங்கில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களும் மிகுந்த பயனடைந்தார்கள் எனலாம். இப்பயிலரங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 


திங்கள், 13 ஜூன், 2011

வானொலி நிகழ்ச்சியில் நம் மாணவர்கள்

ஏப்ரல் மாதத்தில், பள்ளியில் நடைபெற்ற தமிழ்மொழி வாரத்தின்போது ஒலி 96.8 வானொலி நிலையத்தின் படைப்பாளர்கள் பாரதியும் ஆனந்த்தும் நம் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது இளம்மொட்டுகள் என்னும் வானொலி நிகழ்ச்சிக்காக, நம் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் வெளிக்காட்டிய பற்பல திறன்களை அவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். நம் பள்ளி மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வானொலியில் ஒலிப்பரப்பப்பட்டது.



                                                   

செவ்வாய், 7 ஜூன், 2011

சாங்கி விமான நிலையப் பயணம்

கடந்த 01/06/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து சாங்கி விமான நிலையத்திற்கு ஒரு கற்றல் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அப்பயணத்தில் தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். I-phone தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்று நம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


வளமூட்டும் வகுப்புகள்

தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் கலந்துகொண்வளமூட்டும் வகுப்புகள் இரண்டாம் தவணையின் இறுதியில் முடிவடைந்தன. அவ்வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவை பெரிதும் துணைபுரிந்தன எனலாம்.

வளமூட்டும் வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெற்ற நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் படச்சுருள்களும் உங்கள் பார்வைக்கு
: