செவ்வாய், 30 மார்ச், 2010

நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

29/03/10 அன்று நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை இப்போதே எங்களுக்குத் தெரிவியுங்கள்! இவ்வலைப்பூவின் வலதுப்புறத்தில் உள்ள 'நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்தா?’ என்ற வாக்கெடுப்பில் (Poll) உங்கள் வாக்கை இன்றே அளியுங்கள்.

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2 - 29/03/2010

தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இரண்டாவது முறையாக மார்ச் மாதம் 29-ஆம் தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல், சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி ஆகிய நான்கு விளையாட்டுகள் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். தங்கள் குழுவுக்கென்று ஒதுக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டினை மாணவர்கள் விளையாடினார்கள். அவர்களுக்குத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் வழிகாட்டினார்கள். மொத்தத்தில், அன்றைய மாணவர்க்கூட்டம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.









தமிழ்த் தட்டச்சு வகுப்புகள்



இத்தவணையின் தொடக்கத்திலேயே, நம் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் திங்கட்கிழமை (22/03/10) அன்றும் தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் செவ்வாய்கிழமை (23/03/10) அன்றும் தமிழ்த் தட்டச்சு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வெகுநாளாகக் காத்திருந்த பலநாள் கனவு இந்நாள்களில் நிறைவேறின. அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அவ்வகுப்புகளுக்கு வந்து, தமிழில் தட்டச்சு செய்வதை நன்கு கற்றுக்கொண்டனர்.

திங்கள், 29 மார்ச், 2010

நம் மாணவர்கள் கலந்துகொண்ட வளமூட்டும் வகுப்புகள்

கடந்த முதல் தவணையில், தொடக்கநிலை மூன்று முதல் ஆறு வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை மூன்று மாணவர்கள் – வாசிப்போர் அரங்கம்
தொடக்கநிலை நான்கு மாணவர்கள் – கருத்தறிதல்
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் – புத்தாக்கத்துடன் எழுதுதல்
தொடக்கநிலை ஆறு மாணவர்கள் – பேச்சுத்திறனை வளர்த்தல்

மாணவர்களுக்கு அவ்வகுப்புகள் ஒரு புது அனுபவமாக இருந்ததோடு, பல திறன்களையும் வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாகவும் அமைந்தன எனலாம். அவ்வகுப்புகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு:






வெள்ளி, 12 மார்ச், 2010

கண்டுபிடி! கண்டுபிடி! இம்மாத விடுகதைகள்!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?

(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்

2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?

(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்

3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?

(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

சென்ற மாத விடுகதைகளும் பதில்களும்

மாணவர்களே இதோ இம்மாத விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும். அது என்ன?
(1) முதுகு
(2) உதடுகள்
(3) கண்ணிமைகள்

2. பகலில் சுருண்டு இருப்பான். இரவில் விரிந்திருப்பான். அவன் யார்?
(1) கால்
(2) நிலவு
(3) பாய்

3. கை உண்டு கால் இல்லை. உடல் உண்டு தலை இல்லை. அது என்ன?
(1) நிழல்
(2) கடிகாரம்
(3) சட்டை

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. கீர்த்தனா (3A)
  2. ஷாலினி (3A)
  3. டேவிட் ராஜ் (3B)
  4. ஜஃவார் (3B)
  5. ஜொஷிகா (3C)
  6. நஜிமுடின் (3D)
  7. குருஷியத் (3D)
  8. பிரியங்கா (3D)
  9. சபின் சாரா (5A)
  10. யூசுஃப் அஸ்மான் (5A)
  11. ரஹ்மான் அலி (5C)
  12. சினேஹா (5C)
  13. சௌந்தர்யா (6A)

மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இம்மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

பாடலைக் கேள், பயிற்சியைச் செய்!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,

பின்வரும் பாடல் பகுதியை நீங்கள் உங்கள் தமிழ் வகுப்பில் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் பகுதியை மீண்டும் கேளுங்கள். கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளைச் செய்து முடியுங்கள்.




முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 19 ஏப்ரல் 2010, திங்கட்கிழமை