வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 25/01/2010

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் வரலாற்றில் முதன்முறையாகத் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) ஜனவரி மாதம் 25-ஆம் தேதியன்று நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குத் ‘தமிழில் பேசுவோம்; தமிழை நேசிப்போம்’ என்னும் தலைப்பில் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. நம் பள்ளியில் உள்ள தமிழ் பேசக்கூடிய ஆங்கில மொழி ஆசிரியர்கள் சிலர் தமிழ் பேசுவதை மாணவர்கள் படச்சுருள் வாயிலாகக் கேட்டார்கள். தமிழைப் பேசுவதில் பெருமிதம் கொள்ளவேண்டும், தமிழில் பயமின்றி அதிகமாகப் பேச வேண்டும், அதனை வெட்கப்படாமல் பேச வேண்டும் எனப் பல்வேறு கருத்துக்கள் அப்படச்சுருளின்வழி மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர், செல்வி. கீதா அவர்கள், மாணவர்களிடம் உரையாற்றினார். தங்களின் தலைமையாசிரியர் தமிழில் எந்தப் பயமும் வெட்கமும் இல்லாமல் சரளமாகத் தமிழில் பேசுவதைக் கண்ட மாணவர்களுக்குத் தாங்களும் அவ்வாறு தமிழில் பேசவேண்டும் என்ற முனைப்பும் ஆர்வமும் ஏற்பட்டதை அவர்களின் முகங்கள் நன்கு வெளிப்படுத்தின. மொத்தத்தில், மாணவர்கள் அனைவரும் தமிழ்மொழியை அதிகமாகப் பயன்படுத்த இது போன்ற மாணவர்க்கூட்டம் வழிவகுக்கும் என்பது திண்ணம்.

அன்று மாணவர்களுக்குத் திரையிடப்பட்ட படச்சுருள்:
தமிழில் பேசுவோம். தமிழை நேசிப்போம்.

10 கருத்துகள்:

  1. கடந்த மாதம் 25-ஆம் தேதியன்று நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின் போது, நாம் ஆங்கில மொழியிலேயே எப்போதும் பேசிக்கொண்டே இருக்காமல் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாம் தமிழில் பேச வேண்டும் என்பதை என் பள்ளித் தமிழாசிரியர்களும் பள்ளித் தலைமையாசிரியரும் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். நமக்குத் தமிழில் சரளமாகப் பேச இயலாவிட்டாலும், நாம் நம்மால் முடிந்தவரை தமிழில் பேச முயற்சி செய்ய வேண்டும். நாம் தமிழில் பேச வெட்கப்படக்கூடாது. நாம் தமிழில் பேசிக்கொண்டே இருக்கும்பொழுது நமக்கு ஒரு சொல்லைச் சரியாகச் சொல்லத் தெரியாவிட்டால் அச்சொல்லை மட்டும் ஆங்கிலத்தில் கூறுவது தவறில்லை. மொத்தத்தில், நாம் தமிழில் பேசுவோம். தமிழை நேசிப்போம்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் தான் நமது தாய்மொழி. அதைப் பேச நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? நான் என் குடும்பத்தினருடனும் தமிழாசிரியர்களுடனும் நண்பர்களுடனும் தமிழில் பேசுவேன். எனக்குத் தமிழில் பேச மிகவும் பிடிக்கும். எனக்குத் தமிழ்மொழியின்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. தமிழில் பேசும்போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின் போது, பள்ளித் தலைமையாசிரியர் செல்வி.கீதா அருமையாகத் தமிழில் பேசினார். அவர் தமிழில் சரளமாகவும் அழுத்தமாகவும் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பேசியதைக் கேட்டதிலிருந்து என் மனதில் ஒன்றைத் தீர்மானித்துக்கொண்டேன். நான் என் வாழ்க்கையில் நான் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் என் தாய்மொழியான தமிழை மறந்திடாமல் பெருமையுடன் தகுந்த சூழல்களில் பயன்படுத்துவேன் என்பதே என் தீர்மானமாகும். வாழ்க தமிழ்!

    பதிலளிநீக்கு
  3. முருகன்வேல் (5C)4 பிப்ரவரி, 2010 அன்று PM 1:22

    சிலருக்குத் தமிழில் பேசக் கூச்சமாக இருக்கும். ஆனால் நாம் அவ்வாறு கூச்சமோ வெட்கமோ படாமல் தமிழில் பெருமையுடன் பேசவேண்டும். அதுதான் தமிழர்களாகிய நமக்கு அழகு!

    பதிலளிநீக்கு
  4. இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின் போது, எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் எங்களிடம் தமிழில் பேசினார். அவர் நிறைய முக்கியமான செய்திகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அன்று நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். சில ஆங்கில மொழி ஆசிரியர்கள் தமிழில் பேசுவதைப் படச்சுருளில் பார்த்தபோது, நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். அவர்கள் தமிழில் உரையாடிப் பார்ப்பது இதுவே முதன்முறை. நாங்கள் என்றும் தமிழில் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  5. ஜனவரி மாதம் 25-ஆம் தேதியன்று என் பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஆங்கில மொழி ஆசிரியர்கள் சிலர் தமிழில் பேசுவதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். பள்ளித் தலைமையாசிரியர் செல்வி.கீதா தமிழில் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசக் கூச்சப்படக்கூடாது. தமிழ் நம் தாய்மொழி!

    பதிலளிநீக்கு
  6. சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று என் பள்ளியில் நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின்போது, தமிழ் மாணவர்கள் தனியே ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு முதலில், தமிழ் பேசக்கூடிய ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசுவதை நாங்கள் ஒரு படச்சுருள் மூலம் கண்டோம். அவ்வாசிரியர்கள் தமிழ் பேசி நான் கேட்டது இதுவே முதன்முறை. பின், பள்ளித் தலைமையாசிரியர் தமிழில் எங்களோடு உரையாடினார். அவர் தமிழில் பேசியதைக் கேட்ட நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அவர் எங்கள் அனைவரையும் தமிழில் பேச ஊக்குவித்தார். தமிழ் தெரிந்தும் பேசாமல் இருந்தால் அது தமிழர்களாகிய நமக்கு வெட்கக்கேடு என்றார். அவர் பேசியதைக் கேட்ட எங்களுக்கும் எங்கள் நண்பர்களோடு தமிழில் பேசுவதற்கு ஆசை வந்தது. நாள்தோறும் தமிழில் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் நம் தாய்மொழி. நம் நண்பர்கள் நம்மோடு தமிழில் பேச முயற்சி செய்யும்போது நாம் அவர்களைப் பார்த்து கேலி செய்யவோ சிரிக்கவோ கூடாது. நாம் தமிழில் அதிகமாகப் பேச முயற்சி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. தமிழர்களாகிய நாம் தான் நம் தாய்மொழியான தமிழ்மொழியை உயர்ந்தநிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். என் பள்ளியில் நடைபெற்ற முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின்போது, ஆங்கில ஆசிரியர்கள் சிலர் தமிழில் பேசியதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளித் தலைமையாசிரியர், செல்வி.கீதா பயமில்லாமலும் துணிச்சலாகவும் தமிழில் பேசியது எங்களையும் தமிழைப் பெருமையுடன் பேச ஊக்குவித்தது. நாம் நம் தமிழை அழகாகப் பேசினால், மற்ற இன மாணவர்களும் தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆகையால் அமுதத் தமிழில் நாள்தோறும் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  9. என் பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அன்று பள்ளியில் உள்ள தமிழாசிரியர்கள் எல்லாரும் தமிழ் மாணவர்கள் எல்லாரையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு, பள்ளித் தலைமையாசிரியர் எங்களுடன் தமிழில் பேசினார். தமிழைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நாம் அனைவரும் பேசும்படி அவர் ஊக்குவித்தார். நானும் இனியத் தமிழில் பெருமையுடன் பேசுவேன். அன்று நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டம் என்னை கவரும் வண்ணம் அமைந்தது.

    பதிலளிநீக்கு
  10. இரண்டு வாரங்களுக்கு முன், என் பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமையாசிரியர், செல்வி.கீதா தமிழில் பேசினார். அவர் பேசியதைக் கேட்ட எங்களுக்கும் தமிழில் அதிகமாகப் பேச வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் தினமும் வீட்டிலும் என் நண்பர்களுடனும் தமிழில் பேசுவேன்.

    பதிலளிநீக்கு