மாணவர்களின் கட்டுரைகள் (2010 - 2013)

2013 கட்டுரைகள்

ஆருயிர் நண்பர்கள் போட்டி

கதிரவனின் வருகையை எதிர்பார்த்த செடி கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின. அன்று கதிரவன் தனது ஒளிக்கதிர்களுடன் பிரகாசமாகக் காட்சியளித்தான்.

ராமுவும் ரவியும் கூடைப்பந்து விளையாடச் சமூக மன்றத்திற்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல இருந்த இணைபிரியாத நண்பர்கள். சமூக மன்றத்தின் உள்ளே சென்றதும், அங்கு என்னென்ன விளம்பரங்கள் இருந்தன என்று அவர்கள் பார்த்தார்கள். அப்போது அழகான விளம்பரம் ஒன்று அவர்களின் கண்களை ஈர்த்தது.

அந்த விளம்பரம் ஆருயிர் நண்பர்கள் போட்டியைப் பற்றியது. ரவியும் ராமுவும் தங்களுக்கு அந்தப் போட்டி சரியாக அமையும் என்று எண்ணினார்கள். அவர்கள் கண் மூடிக் கண் திறக்கும் நொடியில் அந்தப் போட்டிக்கு விண்ணப்பம் செய்தனர். பின், அவர்கள் அந்தப் போட்டிக்கு எறும்புகள் போல கடுமையாக ஒத்திகை செய்தார்கள்.

மின்னல் வேகத்தில், சில நாட்கள் சென்றன. அன்று போட்டி நடைபெறும் நாள். முதல் சுற்றில் ராமுவும் ரவியும் ஒரு சிற்பத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் கைக்கோர்த்து நிற்பதைப் போல் ஒரு சிற்பத்தை உருவாக்கினார்கள். பின், அடுத்த சுற்றுக்குச் செல்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் அடுத்த சுற்றுக்குப் போவார்களா என்று எண்ணி நடுங்கி நின்றனர். அத்தருணத்தில், அந்த அறிவிப்பாளர் ராமுவும் ரவியும் அடுத்த சுற்றுக்குச் செல்வார்கள் என்று அறிவித்தார். மகிழ்ச்சியில் ராமுவும் ரவியும் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தார்கள்.

இரண்டாவது சுற்றாக அவர்களின் புரிந்துணர்வைத் தெரிந்துகொள்ள கேள்வி பதில் சுற்று நடைபெற்றது. ராமு ஒரு கண்ணாடிப் பேழைக்குள் இருந்தான். ரவியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ரவி கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களைக் கூறினான்.

பின், நடனச் சுற்று நடைபெற்றது. ராமுவும் ரவியும் அதற்காகத் தயாராகினார்கள். நடனச் சுற்று தொடங்கியது. ராமுவும் ரவியும் அற்புதமாக ஆடினார்கள். ஆனால், திடீரென்று, ராமு கால் தவறி கீழே விழுந்தான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த ராமுவுக்கு, மின்னல் வேகத்தில் ஒரு யோசனை உதித்தது. யாருக்கும் தெரியாமல் ராமு ரவியுடன் சேர்ந்து விழுந்து ஒரு நடன அசைவுபோல் அமைத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய நெருங்கிய நண்பன், ரவிக்கு ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. பின், நடனச் சுற்று முடிந்தது.

         அறிவிப்பாளர் வெற்றியாளரை அறிவித்தார். அது ராமுவும் ரவியும் இல்லை. ராமு கவலையுடன் இருந்தான். ஆனால், ரவி மகிழ்ச்சியாக இருந்தான். அவன் ராமுவைச் சமாதானப்படுத்தினான். அந்த நாள், அன்று அவர்கள் இருவருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்தது.



ஜீவிதா
5 Opal





என்னைக் கவர்ந்த தேசிய தினக் கொண்டாட்டம்

தெளிவான வானத்தில், லேசான மழை தூரியது. நானும் என் நண்பர்களும் மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காணச் சென்றோம். சிறிது நேரத்தில், மழை தூரல் நின்றது. ஆனால், சிலு சிலு என்று தென்றல் வீசிக்கொண்டிருந்தது. நான் அந்த இதமான வானிலைக்கு நன்றி சொன்னேன். நாங்கள் அங்கே சீக்கிரமாகச் சென்றதால், கலை நிகழ்ச்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால், நானும் என் நண்பர்களும் எங்களின் இருக்கைகளில் உட்கார்ந்து நாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களைச் சாப்பிட்டோம். பிறகு, அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தோம். ஒவ்வொரு பகுதிக்குப் பின்னால் ஒரு பெரிய திரை இருந்தது.

நிகழ்ச்சி ஆரம்பித்தது. அந்நிகழ்ச்சியைக் காண நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டோம். நான்கு பிரபல நட்சத்திரங்கள் மேடையில் தோன்றினார்கள். அவர்கள் பார்வையாளர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கச்சான் புத்தெங்என்று திரையில் காட்டி, ஒரு சத்தம் கேட்டது. பிறகு, ‘கச்சான் புத்தெங்விற்பனை செய்பவரைப் போல ஆடை அணிந்தவர்கள் பார்வையாளர்களுக்கிடையே சென்று தின்பண்டங்களைப் பார்வையாளர்களின் மீது வீசினார்கள். நான் அதைக் கையில் பிடித்துச் சாப்பிட்டேன். அது மிகவும் இனிப்பாக இருந்தது.

கலைநிகழ்ச்சி தொடங்கியது. நாங்கள் களைப்படைந்து இருக்கையில் உட்கார்ந்திருந்தோம். திடீரென்று மிக உரக்க சத்தம் ஒன்று கேட்டது. என் நண்பர்களின் முகங்களில் அச்சம் தெரிந்தது. ஆனால், நான் சிரித்துக்கொண்டே அவர்களைப் பார்த்தேன். சிரிப்பதை நிறுத்திய பிறகு, அந்தச் சத்தம் பீரங்கியிலிருந்து வந்தது என்று நான் அவர்களிடம் சொன்னேன். என் நண்பர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

அடுத்து, ஆகாயப்படையினரின் அங்கம் நடந்தது. நாங்கள் வித்தியாசமான விமானங்களளைப் பார்த்தோம். அவை வேகமாகப் பறந்து எங்கள் கவனத்தை ஈர்த்தன. சத்தம் இரைச்சலாக இருந்ததால், நாங்கள் எங்களின் காதுகளை இறுக்க மூடிக்கொண்டோம்.

சிறிது நேரத்தில், இருட்டாகிவிட்டது. என்னை மிகவும் கவர்ந்த வாண வேடிக்கைகள் ஆரம்பித்தன. இவை இரவில் நடைபெற்றதால், கருப்பு வானில் வெளிச்சமான தீப்பொறிகள் போன்று வண்ணங்கள் நிறைந்து அழகாகக் காட்சியளித்தன. நாங்கள் அனைவரும் அவற்றை மெய்மறந்து ரசித்தோம்.

இறுதியாக, “பல கதைகள், ஒரு சிங்கப்பூர்!என்று நாங்கள் அலறினோம். கலை நிகழ்ச்சி முடிந்தது. நாங்கள் வீட்டுக்குக் களைப்புடன் திரும்பினோம். நான் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். இதைப் பற்றி என் பெற்றோரிடம் சொல்லி, நான் மனமகிழ்ந்தேன்.


 அல்மீரா ஷாஸ்தா
5 Opal





ஒரு திருட்டு

அன்று ஓர் இனிய புதன் மதியப் பொழுது. ரகு பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தான். சூரியனின் வெளிச்சம் அவனின் மேல் பட்டது. அந்தச் சூட்டைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ரகு தன் துண்டை வைத்து தன் வியர்வைத் துளிகளைத் துடைத்தான். அவனின் வீடு ஒரு கடை பக்கத்தில் இருந்ததால், அவன் அங்கிருந்த குளிர்சாதன வசதியை அனுபவிக்க அவன் அந்தக் கடையை நோக்கி நடந்தான். சற்று நேரம் கழித்து, ரகு அந்தக் கடையை அடைந்தான். அங்கு வேலைப் பார்த்த ஆடவர் அவனிடம் வணக்கம் கூறினார். ரகு சிரித்துக்கொண்டே அந்தக் கடையைச் சுற்றிப் பார்த்தான். அவன் அங்குச் சில பேனாக்கள் இருப்பதைக் கண்டான். அந்தப் பேனாக்கள் அவனை ஈர்த்ததால், அவன் அந்தப் பேனாக்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். பல நிமிடங்கள் நன்கு யோசித்த பிறகு, ரகு ஒரு விலையுயர்ந்த பேனாவைத் தேர்ந்தெடுத்தான்.

அவன் அந்தப் பேனாவைக் கையில் எடுத்தான். அப்போது அவன் தன் பணத்தை எடுக்கப் போனான். ஆனால், அவனிடம் பணம் இல்லை என்பதை அவன் அறிந்தான். ஐயோ! நான் இப்போது என்ன செய்வது?” என்று அவன் யோசனையில் மூழ்கினான். அவன் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தான். அப்போது ரகுவிற்கு ஒரு கெட்ட எண்ணம் தன் மனத்துக்குள் தோன்றியது. அவனுக்கு மற்றவர்களை ஏமாற்றும் குணம் இருந்தது. அவன் உடனே ஒரு அலமாரியின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்தப் பேனாவைத் தன் சட்டைப் பையில் போட்டான். பிறகு, அவன் வெளியே ஒன்றும் நடக்காததுபோல் நடந்தான். அப்போது கடையின் பாதுகாப்பு மணி ஒலித்தது. கடையின் வாசலில் நின்ற ஆடவர் உடனே அவனைத் தடுத்தார்.

அவர் ஒரு வெறிகொண்ட சிங்கத்தைப் போல நின்றார். ரகு பயத்துடன் நின்றான். நீ என்ன செய்கிறாய்?” என்று எட்டு ஊர்களுக்குக் கேட்கும்படி அவர் அலறினார். உடனே அங்கிருந்த எல்லோரும் ரகுவைத் திரும்பிப் பார்த்தனர். ரகுவின் முகம் சிவப்பாக மாறியது. ரகு ஒரு சிறு அழுகுரலில், “என்னை மன்னித்துவிடுங்கள்!என்று சொன்னான். அந்த ஆடவர் ரகுவைப் பார்த்து மனம் இரங்கி ரகுவை விட்டார். ரகு அவசர அவசரமாகப் பேனாவை அவரிடம் கொடுத்துவிட்டு வெட்கித் தலை குனிந்தபடியே கடையை விட்டு வெளியேறினான். அவன் தன் தவற்றை உணர்ந்து வேதனைப்பட்டான். பிறகு, ரகு தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினான்.
 




முகமது ஜாசிம்
5 Opal







2011 கட்டுரைகள்

இனி என்ன செய்வேன்?

ரவி, ராமு... பேசிக்கொண்டே இருக்காதீர்கள்! விரைவாகப் பேருந்தில் வந்து ஏறுங்கள்! என்று எங்கள் ஆசிரியிர் கூறியவுடன் நாங்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் பேருந்தில் மற்ற மாணவர்களுடன் ஏறினோம். பேருந்தில் நாங்கள் ஒன்றாகப் பின் வரிசையில் உட்கார்ந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட தமிழ் அரும்பொருளகத்தை விரைவிலேயே வந்தடைந்தோம்.

      அங்கே அடைந்ததும், நாங்கள் பேருந்திலிருந்து இறங்கி, வரிசையில் நின்றோம். நாங்கள் அரும்பொருளகத்திலுள்ள நுழைவாயிலுக்குள் சென்றோம். அங்கே சென்றவுடன் அரும்பொருளகத்தின் அதிகாரி, திரு.முகிலனை நாங்கள் சந்தித்தோம். அவர் எங்களை வரவேற்றார். அவர் எங்களிடம் அரும்பொருளகத்தைப் பற்றிப் பல தகவல்களைக் கூறினார். நாங்கள் கவனமாகக் கேட்டு, அந்தத் தகவல்களைக் குறித்துக்கொண்டோம்.

      அடுத்து, அவர் எங்களைப் பாரதியார் சிலைக்கு அழைத்துச் சென்றார். திரு.முகிலன் பாரதியாரைப் பற்றிச் சில தகவல்களை எங்களிடம் கூறினார். அவர் கூறிய தகவல்களை நானும் ரவியும் மிக விரைவாகக் குறித்துக்கொண்டோம். அதனால், மற்ற மாணவர்களிடமிருந்து விலகி, நாங்கள் பக்கத்திலிருந்த ஔவையார் சிலைக்குச் சென்றோம். ஔவையார் சிலைக்குப் பக்கத்தில் தமிழ்ப் புலவர்களின் சிலைகள் பல இருந்தன. ஔவையார் ஒரு கையில் கம்பும் மறுகையில் ஓலைச்சுவடியும் வைத்தபடி நின்றுகொண்டிருந்தார். நாங்கள் சிலையை உற்றுப் பார்த்தபோது அந்த ஓலைச்சுவடி பிடித்திருந்த கை சரியாகப் பொருத்தப்படாமல் இருந்தது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

திடீரென்று, அந்தச் சிலையின் கை விழ ஆரம்பித்தது. நல்ல வேளை! கண் மூடிக் கண் திறக்கும் நொடியில், நான் அந்தக் கையைப் பிடித்துக்கொண்டேன். நானும் ரவியும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். அப்போது என் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், ராமுவைப் பாருங்கள்! அவன் ஔவையார் சிலையின் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்! என்று கத்தினான். உடனே, எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். அவர்களின் மனதிலிருந்த கோபம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. நான் உடனே, இல்லை! நான் சிலையின் கையை எடுக்கவில்லை! நான்... என்று தொண்டைக் கிழிய கத்த தொடங்கினேன். ஆனால், அதற்குள் நான் மயங்கிக் கீழே விழுந்தேன்.

      ஒரு புலி எப்படி வேகமாக ஒரு மானைத் துரத்துமோ, அவ்வளவு வேகமாக நேரம் சென்றது. திடீரென்று, தண்ணீர் என் கண்களில் பட்டது. நான் மெதுவாக என் கண்களைத் திறந்தேன். எல்லாரும் என் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். நான் உடனே, நான் சிலையின் கையை உடைக்கவில்லை,” என்று கூறினேன். கவலைப்படாதே. ரவி என்னிடம் எல்லாவற்றையும் சொன்னான்,” என்று அங்குப் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறினார். என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது. நான் உடனே ரவியைக் கட்டி அணைத்துக்கொண்டேன். நான், அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப நீ எனக்கு உதவினாய். நீ தான் என்னுடைய உண்மையான நண்பன்,” என்று கூறினேன். கவலைப்படாதே! என்று ரவி கூறினான். பின், நாங்கள் அரும்பொருளகத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தோம். சற்று நேரத்தில், நாங்கள் பேருவகையுடன் வீட்டிற்குச் சென்றோம்.


மிர்சான்
6 Topaz



இளையர் ஒலிம்பிக்ஸ் கூடைப்பந்து போட்டி

      “இளையர் ஒலிம்பிக்ஸ் கூடைப்பந்து போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், ரவி, விக்ரம், பாலு,” என்று அறிவிப்பாளர் பெயர்களை அறிவித்தார். ரவி, ராமு, விக்ரம் மூவரும் தங்கள் பெயர்களைக் கேட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். விக்ரம்தான் அவர்களுடைய குழுத் தலைவனாக அறிவிக்கப்பட்டான். இதைக் கேட்டு அனைவரும் ஆரவாரம் செய்தார்கள்.

      அன்றிலிருந்து மூன்று வாரங்களுக்கு, மூவரும் கூடைப்பந்து பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டார்கள். அவர்களுடைய பயிற்றுவிப்பாளர் அவர்களுக்கு நிறைய பயிற்சிகளைக் கொடுத்தார். அவர்கள் அந்தப் போட்டியில் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் கலந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்களின் எதிர்தரப்புக் குழு எழுபது புள்ளிகளோடு முன்னணியில் இருந்தது. ஆனால், விக்ரமுடைய குழு ஐம்பது புள்ளிகளே பெற்று இருந்தது. இந்தப் புள்ளி விவரங்கள் அங்கிருந்த பலகையில் காட்டப்பட்டன. ஆனால், விக்ரமும் அவன் குழுவும் மனம் தளராமல் விளையாடினார்கள்.

      இருபது நிமிடங்களுக்குப் பிறகு, போட்டி முடிந்தது. அவர்களின் எதிர்தரப்புக் குழு தொண்ணூற்று ஐந்து புள்ளிகள் பெற்றிருந்தது. ஆனால், விக்ரமுடைய குழு அறுபது புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தது. அச்சமயத்தில், நடுவர்கள் அவர்களின் எதிர்தரப்புக் குழு வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். இதைக் கேட்டு, விக்ரமும் அவனின் குழுவும் வருத்தம் அடைந்தார்கள். அப்போது விக்ரம், “நாம் இப்போட்டியில் விளையாடும்போது நாம் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் விளையாடினோம். அதனால், கவலைப்படாதீர்கள்! தோல்வியே வெற்றிக்கு முதல்படி!” என்று தன் குழுவைப் பார்த்துச் சொன்னான். இதைக் கேட்டு அவர்கள் மனமகிழ்ந்து வீடு திரும்பினார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் அடுத்த ஆண்டு இப்போட்டியில் பங்கேற்று வெல்வார்கள் என்று உறுதி பூண்டார்கள்.

                                                                  
                                                    லவின்யா  
6 Sapphire 


நாடகப் போட்டி
      ரவி, எனக்குப் பரபரப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது,” என்று நான் என் அருகில் அமர்ந்திருந்த ரவியிடம் கூறினேன். ஆமாம், ராதா. எனக்கும் அப்படித்தான் இருக்கிறது,” என்று ரவி பதிலளித்தான். மாணவர்களே, நாம் சமூக மன்றத்திற்கு வந்துவிட்டோம். நாடகப்போட்டிக்கு அனைவரும் தயார்தானே? அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்குங்கள்,” என்று என் தமிழ் ஆசிரியர் திருமதி திவ்யா கட்டளையிட்டார். அனைவரும் புன்னகை தவழும் முகங்களுடன் பேருந்திலிருந்து கீழே இறங்கினோம்.  

      ஆசிரியர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்கிக் கூறினார். பிறகு, நாங்கள் எங்கள் உடைகளை மாற்றிக்கொள்ள ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உடையை மாற்றிய பிறகு நாங்கள் அணிகலன்களை அணிந்துகொண்டோம். அறையை விட்டு வெளியே வந்தவுடன், ஆசிரியர் அவர் பட்டியலிலிருந்த பெயர்களை அழைத்து, மாணவர்கள் அனைவரும் இருக்கிறார்களா என்று சரிபார்த்தார். ரவி, ராதா, மாறன், நந்தா என்று பெயர்களை வரிசையாக அவர் அழைத்தார். ஆசிரியர், நந்தாவைக் காணவில்லை,” என்று பதற்றத்துடன் நான் கூறினேன். உடனே, ஆசிரியர் தன் கைத்தொலைபேசியை எடுத்து நந்தாவை அழைத்தார். ரிங்... ரிங்... என்று தொலைபேசி மணி ஒலித்தது. ஆனால், மறுமுனையில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. விவரிக்க முடியாத அதிர்ச்சியும் பதற்றமும் ஆசிரியரின் முகத்தில் அலை மோதியது.

      என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆசிரியர் ஆழ்ந்தார். என்ன செய்வதென்று அறியாமல் நாங்கள் அனைவரும் திரு திரு என விழித்தோம். அப்போது, அடுத்து, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் உங்கள் அனைவரையும் அவர்களது உலகிற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள்,” என்று அறிவிப்பாளர் அறிவித்தார். திடீரென்று, யாரோ ஒருவன் தூரத்திலிருந்து ஓடி வருவது என் கவனத்தை ஈர்த்தது. கூர்ந்து கவனித்த நான், நந்தா தான் தன் வேடத்திற்கான உடையில் தலைதெறிக்க ஓடி வருகிறான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். ஆசிரியர், அதோ பாருங்கள்! என நான் கூச்சலிட்டதைச் செவிமடுத்த எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். நந்தாவைக் கண்டதும், ஆசிரியர் நிம்மதி பெருமூச்சு விட்டார். பிறகு, உடலெங்கும் இன்ப நீரூற்றுப் பாய்வது போல எல்லையில்லா ஆனந்தம் அனைவரின் முகங்களிலும் காணப்படட்து. நாங்கள் நாடகத்தை அருமையான முறையில் நடித்து முதல் பரிசு பெற்றோம். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குத் திரும்பினோம்.


சபின் சாரா
6 Topaz


 



எதிர்பாராத சம்பவம்

      அப்பா விரைவாகச் சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கி வாருங்கள்,” என்று நானும் என் தம்பி ராமுவும் கூறினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்பதால் புதிதாகத் திறந்திருந்த கேளிக்கைச் சந்தைக்கு நானும் என் குடும்பத்தினரும் சென்றிருந்தோம். அப்பா நுழைவுச்சீட்டுகளை வாங்கிவரும் வரை நாங்கள் நுழைவாயிலில் உற்சாகத்தோடு காத்திருந்தோம்.

      சற்று நேரத்தில், அப்பா நுழைவுச்சீட்டுகளோடு வந்தார். சிறிது நேரம்கூடப் பொறுக்க முடியாத நானும் என் தம்பியும், அப்பா எங்களிடம் நுழைவுச்சீட்டுகளைக் கொடுங்கள்! என்று கூறி, அப்பாவின் கையிலிருந்து நுழைவுச்சீட்டுகளைப் பிடுங்கினோம். பின்னர், நாங்கள் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த வேலையாளரிடம் அச்சீட்டுகளைக் கொடுத்துவிட்டு மானைப் போல் துள்ளிக் குதித்துக்கொண்டே சந்தையினுள் என் பெற்றோருடன் நுழைந்தோம். பிறகு, என் அப்பா நாங்கள் சாப்பிடுவதற்குத் தின்பண்டங்கள் வாங்கச் சென்றார். அத்தருணத்தில், என் அம்மா நானும் ராமுவும் யானை, முயல், எலி போன்ற உடைகளை அணிந்தவர்களோடு சேர்ந்து நிற்பதைப் புகைப்படம் எடுத்தார். பிறகு, விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட நானும் என் தம்பியும் சந்தையிலிருந்த அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபட்டோம். அதன் பின்னர், நாங்கள் சந்தையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது விமான வடிவிலான ஒரு ராட்டினம் எங்களின் கண்களில் தென்பட்டது.
      உடனே, அப்பா! அம்மா! நாங்கள் அந்த ராட்டினத்தில் சுற்ற வேண்டும்,” என்று நானும் ராமுவும் அடம்பிடித்தோம். முதலில் யோசித்த எங்கள் பெற்றோர், எங்களின் தொந்தரவு தாங்க முடியாமல், அந்த ராட்டினத்தில் சுற்ற அனுமதி தந்தனர். உடனே, மலர்ந்த முகங்களுடன் நானும் ராமுவும் ராட்டினத்தில் ஏறி அமர்ந்தோம். சற்று நேரத்தில் ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது. நாங்கள் உற்சாகத்தில் எங்களின் பெற்றோரை நோக்கி கைகளையாட்டி ஆரவாரம் செய்தோம். சிறிது நேரத்தில், எங்கள் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

      திடீரென்று, உயரத்தில் வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம் மெதுவாகச் சுற்ற ஆரம்பித்தது. சற்று நேரத்தில், அந்த ராட்டினம் உயரத்தில் இருந்த வண்ணம் நின்றது. அதைப் பார்த்த என் பெற்றோர் திகைப்புடன் வாயைப் பிளந்து சிலையாய் நின்றனர். உடனே, ஐயோ! அம்மா! அப்பா! என்று நானும் ராமுவும் தொண்டைக் கிழியக் கத்தினோம். இம்மாதிரியான சம்பவத்தை முதன்முறையாக எதிர்கொண்ட நானும் ராமுவும் அழ ஆரம்பித்தோம்.

      நாங்கள் அழுவதைப் பார்த்த எங்களின் அப்பா, அரக்க பரக்க கேளிக்கைச் சந்தையிலுள்ள கருவிகளைப் பழுதுப்பார்ப்பவரை அழைத்து வரச் சென்றார். அப்போது, பயப்படாதீர்கள் பிள்ளைகளே! அப்பா இதோ கண் முடிக் கண் திறக்கும் நொடியில் பழுதுப்பார்ப்பவரை அழைத்து வந்துவிடுவார்,” என்று எங்களின் அம்மா எங்களைச் சமாதானப்படுத்தினார். ஆனால், அம்மா எவ்வளவு சொல்லியும் நாங்கள் ஓயாமல் பீதியில் கத்திக்கொண்டே இருந்தோம். அப்போது எங்களின் அப்பா பழுதுப்பார்ப்பவரை அழைத்து வந்தார். சோகமே வடிவாய் இருந்த எங்களின் முகம் பழுதுப்பார்ப்பவரைப் பார்த்தவுடன் சற்று மலர்ந்தது.

      உடனே, அவர் உயரத்தில் நின்று போன ராட்டினத்தைப் பழுதுப்பார்த்துவிட்டுக் கீழே இறங்கினார். ராட்டினமும் மெதுவாகக் கீழே இறங்கியது. உடனே, நானும் ராமுவும் ராட்டினத்திலிருந்து கீழே இறங்கி ஓடிச் சென்று எங்களின் பெற்றோரை அணைத்துக்கொண்டோம். பிறகு, அந்த ராட்டினத்தில் இருந்த மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் சரியான நேரத்தில் பழுதுப்பார்ப்பவரை அழைத்து வந்ததற்காக எங்கள் அப்பாவிடம் நன்றி கூறினர். பின்னர், நாங்களும் சற்று நேரத்தில் கேளிக்கைச் சந்தையிலிருந்து விடைபெற்று வீட்டிற்குச் சென்றோம். இந்த எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் என் மனதில் பசுமரத்தாணிப் போலப் பதிந்தது.



பாத்திமா
6 Ruby






2010 கட்டுரைகள்

ஆருயிர் நண்பர்கள் போட்டி

மாலை சுமார் நான்கு மணி இருக்கும். வானத்தில் கதிரவன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல மேற்றிசையில் பாய்த்துக்கொண்டிருந்தான். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் முடித்த திருப்தியுடன் நகமும் சதையுமாய் இருந்த இணைபிரியாத நண்பர்கள், அலியும் ராமுவும் சமூக நிலையத்திற்குக் கூடைப்பந்து விளையாட ஆவலோடு சென்றார்கள்.

அலியும் ராமுவும் சமூக நிலையத்தை அடைந்ததும், அவர்களின் கண்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையை நோக்கிச் சென்றன. ஒரு விளம்பரம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அது ஆருயிர் நண்பர்கள் போட்டி பற்றிய ஒரு விளம்பரம் ஆகும். அலிக்கும் ராமுவுக்கும் இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஒரு கணம் உதித்தது. உடனே, அவர்கள் அப்போட்டிக்கு விண்ணப்பம் செய்தார்கள். அதற்கான ஒத்திகையையும் ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முதலில் திறன் சுற்றுக்காக ஒரு நடனத்தைப் படைத்து, அதற்காகப் பயிற்சி செய்தனர். அதில், அலி ராமுவை விட சற்று சிறப்பாகவே நடனம் ஆடினான். பின், விண்ணப்பத் தாளில் ஒரு சிற்பம் அமைக்கும் படி எழுதியிருந்ததால், அவர்கள் முதலில் ஒரு சிற்பக்கலை பயிற்சியில் ஈடுபட்டனர். பிறகு, போட்டிக்குத் தேவையான ஒரு சிற்பத்தை அழகான முறையில் செய்ய ஆரம்பித்தனர். அதில், அவர்கள் கைக் கோர்த்து நிற்பதைப் போல ஓர் அருமையான சிற்பத்தைச் செய்தனர். அவர்கள் செய்த சிற்பத்தைக் கண்டு, அவர்கள் பேருவகை அடைந்தார்கள்.

அவர்க்ள தொடர்ந்து நடனத்திற்காக நன்றாகப் பயிற்சி செய்து வந்தார்கள். இரண்டு நாள்களில், போட்டி இடம்பெறும் நாளும் வந்தது.

அன்று, அவர்கள் சமூக நிலையத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்களின் படைப்பைப் படைப்பதற்கு ஆர்வமாக இருந்தாலும், போட்டி என்பதால், அவர்களுக்குப் படப்படப்பாகவே இருந்தது. முதலில் அவர்கள் செய்த சிற்பத்தைப் பற்றி மற்ற போட்டியாளர்கள் யாரும் சொல்லாத அளவுக்கு அவர்கள் விளக்கமாகக் கூறி, அனைவரையும் கவர்ந்தனர்.
அவர்களுக்கே தெரியாமல் இரண்டாவது சுற்றாக அவர்களின் புரிந்துணர்வைத் தெரிந்துகொள்ள கேள்வி பதில் சுற்று நடைபெற்றது. இந்தச் சுற்றிலும் அவர்க்ள எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்து நீதிபதிகளின் மனங்களை ஈர்த்தனர்.

சற்று நேரத்தில், அலியும் ராமுவும் மனதில் அச்சத்துடன் மேடைக்கு வந்தனர். இறுதிச் சுற்றான நடனச் சுற்று தொடங்கியது. இரண்டு பேரும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று, கண் சிமிட்டும் நேரத்தில், ராமு கால் தவறி கீழே விழுந்தான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அலிக்கு மின்னல் வேகத்தில் ஒரு யோசனை உதித்தது. அலியும் யாருக்கும் தெரியாமல் ராமுவோடு சேர்ந்து விழுந்து ஒரு நடன அசைவு போல அமைத்தான். அந்தச் செயல் ராமுவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

நடனச் சுற்றுக்குப் பின், நீதிபதிகள் முடிவுகளை அறிவித்தார்கள். அதில், அலியும் ராமுவும் தான், அவர்கள் நினைத்தது போலவே, முதல் பரிசைத் தட்டிச் சென்றனர், அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிப்போனார்கள். அவர்களின் நட்புக்குக் கிடைத்த இந்த வெற்றியை எண்ணி, அவர்கள் பெருமிதம் கொண்டனர்.


யூசுஃப் (5A)

என்னைக் கவர்ந்த தேசிய தினக் கொண்டாட்டம்

தெளிவான வானம் என்னைப் பார்த்துப் புன்னகை விரித்தது போல் ஓர் உணர்வு. நானும் என் நண்பர்களும் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காண பாடாங் அரங்கத்திற்குச் சென்றிருந்தோம். இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததால், நானும் என் நண்பர்களும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினோம். நாங்கள் சீக்கிரமாக வந்துவிட்டதால், அந்த நிகழ்ச்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

நாங்கள் வாங்கிய சில தின்பண்டங்களைச் சாப்பிடத் தொடங்கினோம். அந்த அரங்கத்தில் ஒவ்வொரு பகுதிக்குப் பின்னால் ஒரு பெரிய திரை இருந்தது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அதில் பலவிதமான படச்சுருள்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்டுகொண்டே நாங்கள் அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

சற்று நேரம் கழித்து, கலை நிகழ்ச்சி ஆரம்பித்தது. எனக்கும் என் நண்பர்களுக்கும் அந்நிகழ்ச்சியைக் காண மிக ஆர்வமாக இருந்தது. அப்போது, நான்கு பிரபல நட்சத்திரங்கள் மேடையில் தோன்றினார்கள். பாடாங் அரங்கத்தில் இருந்த எல்லோரும் சத்தமாகக் கத்தினோம்.

நாங்கள் அவர்களோடு ஆடிப் பாடி மகிழ்ந்தோம். சற்று நேரத்தில், நாங்கள் களைப்படைந்ததால், எங்கள் இருக்கைகளில் உட்கார்ந்தோம். திடீரென்று, மிக உரக்க சத்தம் ஒன்றை நாங்கள் கேட்டோம். என் நண்பர்களின் முகங்களில் அச்சம் தெரிந்தது. ஆனால், அது அங்கிருந்த பீரங்கியிலிருந்து வந்த ஒலி என்று அறிந்து எல்லோரும் பெருமூச்சு விட்டோம். அதைப் பார்த்து வியந்தோம். அது முடிந்தவுடன், ஆகாயப் படையினரின் அங்கம் இடம்பெற்றது. நிறைய வித்தியாசமான விமானங்கள் வானத்தில் வேகமாகப் பறந்து எங்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த விமானங்கள் பறந்தபோது மிகவும் இரைச்சலாக இருந்ததால், நாங்கள் எங்கள் காதுகளை இறுக்க மூடிக்கொண்டோம்.

அதற்குள், இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ஆனால், கலை நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. இறுதி அங்கமாக, என்னை மிகவும் கவர்ந்த வாண வேடிக்கைகள் நடைபெற்றன. அவை இரவில் நடைபெற்றதால், கருப்பு வானில் வெளிச்சமான தீப்பொறிகள் போன்று வண்ணங்கள் நிறைந்தும் அழகாகவும் காட்சியளித்தன. நானும் என் நண்பர்களும் அவற்றைக் கண்டு மெய்மறந்து ரசித்தோம். நாங்கள் அவற்றைச் சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம்.

கடைசியில், நானும் என் தோழர்களும், “சிங்கப்பூர் எங்களின் நாடு!என்று உரக்கக் கத்தினோம். நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒன்பது மணிக்கு நாங்கள் வீட்டுக்குக் களைப்புடன் திரும்பினோம். அன்றிரவு, நான் சிங்கப்பூரில் பிறந்து, அதில் வசிப்பது குறித்து பெருமிதம் கொண்டேன். அந்த உணர்வோடு நான் உறங்கச் சென்றேன். 









  
ஆஷிக் (5A)