வெள்ளி, 29 ஜூலை, 2011

தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி 2011

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாக S2 குழுமத் தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி ஒன்றுக்கு இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்தது. S2 குழுமத்தில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்லூடகப் பயிற்றுவளங்களை உருவாக்குவதில் தங்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்காகவும் S2 குழுமத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான ஒளிப்பகுதிகளைத் தயாரித்துப் பெருக்குவதற்காகவும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் போட்டி இவ்வாண்டு தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டி பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் 14 ஜூலை 2011 அன்று நடைபெற்றது. போட்டிக்கு நீதிபதிகளாகத் தேசிய கல்விக் கழகத்தின் இணை பேராசிரியர் முனைவர் A Ra சிவகுமாரன் அவர்களும் கல்வி அமைச்சின் கல்வித் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த தயாரிப்பாளர், திரு செல்வராஜூ அவர்களும் வருகை தந்திருந்தனர்.
போட்டிக்கு மொத்தம் ஐந்து பள்ளிகளிலிருந்து படைப்புகள் வந்திருந்தன. அந்தப் பள்ளிகள்:

·        குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி
·        பெய் தொங் தொடக்கப்பள்ளி
·        நியூ டவுன் தொடக்கப்பள்ளி
·        ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி
·        பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி

படைப்புகள் யாவும் மாணவர்களின் தயாரிப்பாக இருந்தன. ஒவ்வொரு படைப்பும் ஒரு விளம்பரத்தைக் காட்டும் படச்சுருளாக அமைந்தது.

போட்டியில் நியூடவுன் தொடக்கப்பள்ளி வெற்றி வாகை சூடியது. பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி இரண்டாம் நிலையிலும், ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி மூன்றாம் நிலையில் வந்தன. குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியும் பெய் தொங் தொடக்கப்பள்ளியும் ஆறுதல் பரிசுகள் பெற்றன.

எங்களுக்கு ஆதரவு அளித்து இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிய அனைத்துப் பள்ளிகளுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு:


 



 







 





திங்கள், 25 ஜூலை, 2011

தொடக்கநிலை 6 மாணவர்களுக்கான பயிலரங்கு

22/06/2011 அன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காகத் தொடக்கநிலை இறுதியாண்டுத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராகும் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இந்த இரண்டு மணி நேர பயிலரங்கின் போது, மாணவர்கள் தங்களின் தமிழ்த் தேர்வில் உள்ள வாய்மொழி, கட்டுரை, வேற்றுமை என ஒவ்வொரு கூறுக்கும் எவ்வாறு தங்களைத் தயார் படித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார்கள். இப்பயிலரங்கில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களும் மிகுந்த பயனடைந்தார்கள் எனலாம். இப்பயிலரங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 


திங்கள், 13 ஜூன், 2011

வானொலி நிகழ்ச்சியில் நம் மாணவர்கள்

ஏப்ரல் மாதத்தில், பள்ளியில் நடைபெற்ற தமிழ்மொழி வாரத்தின்போது ஒலி 96.8 வானொலி நிலையத்தின் படைப்பாளர்கள் பாரதியும் ஆனந்த்தும் நம் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது இளம்மொட்டுகள் என்னும் வானொலி நிகழ்ச்சிக்காக, நம் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் வெளிக்காட்டிய பற்பல திறன்களை அவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். நம் பள்ளி மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வானொலியில் ஒலிப்பரப்பப்பட்டது.



                                                   

செவ்வாய், 7 ஜூன், 2011

சாங்கி விமான நிலையப் பயணம்

கடந்த 01/06/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து சாங்கி விமான நிலையத்திற்கு ஒரு கற்றல் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அப்பயணத்தில் தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். I-phone தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்று நம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


வளமூட்டும் வகுப்புகள்

தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் கலந்துகொண்வளமூட்டும் வகுப்புகள் இரண்டாம் தவணையின் இறுதியில் முடிவடைந்தன. அவ்வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவை பெரிதும் துணைபுரிந்தன எனலாம்.

வளமூட்டும் வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெற்ற நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் படச்சுருள்களும் உங்கள் பார்வைக்கு
:

 
 

 









தாய்மொழி முகாமில் தமிழ்

கடந்த 21/05/2011 அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளி தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கையாக நாடகப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் நான்காம் வகுப்பு மாணவர்களோடு, தொடக்கநிலை 3,5,6 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபெற்றனர்.

ரவிந்திரன் நாடகக்குழுவைச் சேர்ந்த திரு.சௌந்தரராஜன் அப்பயிலரங்கில் சில நாடக உத்திகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். மாணவர்கள் நாடக விளையாட்டுகளிலும் நாடகப் படைப்புகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுப் பயனடைந்தார்கள்.

அப்பயிலரங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 

சனி, 30 ஏப்ரல், 2011

தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்...

தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் காலம் இது. 
உங்கள் நேரத்தை நல்வழியில் வகுத்து உங்களின் பாடத்திருப்பங்களை நல்ல முறையில் செய்திடுங்கள். 
உங்களின் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!

வெற்றி உங்களுக்கே!  

உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய எங்களுடைய இனிய நல்வாழ்த்துக்கள்!


Source (மூலம்): 
Youtube - http://www.youtube.com/watch?v=x3PuKG2HqWs

சனி, 23 ஏப்ரல், 2011

கண்டுபிடி! கண்டுபிடி! – விடைகள்

கொடுக்கப்பட்ட இரண்டு படங்களில், மொத்தம் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன என்ற கேள்விக்குச் சரியான பதில்: 6

அந்த ஆறு வித்தியாசங்கள் பின்வருமாறு:



இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்தவர்கள்:

அல்மிரா (3Opal)
ஜமிர் (5Opal)
முருகன்வேல் (6Sapphire)
ஆஷிக் (6Topaz)
யூசுஃப் (6Topaz)
பாத்திமா (6Ruby)

இந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்குப் பள்ளியில் நடைபெற்ற தமிழில் என்ன?’ என்ற புதிர்ப்போட்டியில் ஒரு கூடுதல் புள்ளி (Bonus point) வழங்கப்படும்.

அதுபோல், தமிழ்மொழியாம் செம்மொழியாம் என்ற படச்சுருளில், மொத்தம் எத்தனை ஒற்றை எழுத்துகள் வந்தன என்ற கேள்விக்குச் சரியான பதில்: 23

அந்த 23 எழுத்துகள் பின்வருமாறு:

,,,,,,,,,, கு,,,, மு,,,,,,,,

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்தவர்கள்:

ஆஷிக் (6Topaz)
பாத்திமா (6Ruby)

இந்த இரண்டு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்குப் பள்ளியில் நடைபெற்ற தினம் ஒரு விடுகதை?’ என்ற புதிர்ப்போட்டியில் ஒரு கூடுதல் புள்ளி (Bonus point) வழங்கப்படும்.

இந்தக் கண்டுபிடி! கண்டுபிடி! போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி! தொடர்ந்து இதுபோன்ற போட்டிக்காக இவ்வலைப்பூவில் எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தமிழ்மொழி வாரம் முடிவடைந்தது!

இவ்வாண்டு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி அனுசரித்த தமிழ்மொழி வாரம் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 11/04/2011 அன்று நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தோடு தொடங்கிய இவ்வாரத்தில் மாணவர்கள் பற்பல மொழி நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் மிகந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.

பள்ளியின் அறிவிப்புப் பலகையில் நிகழ்ந்த தினம் ஒரு விடுகதை மற்றும் தமிழில் என்ன?’ என்ற போட்டிகளுக்கும் வலைப்பூவில் நடந்த கண்டுபிடி! கண்டுபிடி என்ற போட்டிக்கும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கான பதில்களும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுடைய விவரங்களும் இவ்வலைப்பூவில் விரைவில் வெளியிடப்படும். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

தமிழ்மொழி வாரம் சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி! தமிழ்மொழி வாரம் முடிவுபெற்றாலும், நாம் தொடர்ந்து தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!















வானொலி நிலையாத்தாருடன் சந்திப்பு

பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, 12/04/2011 அன்று ஒலி 96.8 வானொலி நிலையத்தின் படைப்பாளர்கள் பாரதியும் ஆனந்த்தும் நம் பள்ளிக்கு வருகை அளித்திருந்தார்கள். தங்கள் வாழ்க்கையில் தமிழ்மொழி பெறும் முக்கியத்துவத்தையும் அவர்களின் தமிழ்மொழி புழக்கம் குறித்தும் அவர்கள் நம் மாணவர்களுடன் ஒரு உரை நிகழ்த்தினார்கள். அதோடு, அவர்களின் தற்போதைய வானொலி படைப்பாளர் பணியில் அவர்கள் எனனென்ன செய்வார்கள் என்பதையும் நம் மாணவர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில்களைக் கூறிய மாணவர்களுக்கு ஒலி 96.8-இன் சின்னம் கொண்ட கவர்ச்சிமிக்க பரிசுப் பைகளையும் வழங்கி, மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள். 

அதற்குப் பிறகு, இளம்மொட்டுகள் என்னும் வானொலி நிகழ்ச்சிக்காக, நம் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் வெளிக்காட்டிய பற்பல திறன்களை அவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். நம் பள்ளி மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் நாம் வானொலியில் கேட்டு மகிழலாம். குறிப்பாக எந்த நாள் என்பதை நாங்கள் அடுத்த மாதம் அறிவிப்போம். எதிர்பார்த்துக் காத்திருங்க்ள!

அந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: