வியாழன், 2 மே, 2013

குட்டி இந்தியாவிற்குக் கற்றல் பயணம்

02/04/2012 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் குட்டி இந்தியாவிற்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். ஏமேசிங் ரேஸ் (Amazing Race) என்ற பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி போல், மாணவர்கள் குட்டி இந்தியாவில் உள்ள பற்பல இடங்களுக்குத் தங்கள் குழுக்களோடு சென்று அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்தோடு பங்குபெற்றனர். மாணவர்களில் சிலர் குட்டி இந்தியாவிற்குப் பலமுறை குடும்பத்தோடு வந்திருந்தாலும் அன்று அங்கு அவர்கள் தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது அவர்களில் பலருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம். கற்றல் பயணத்தின் முடிவில், மாணவர்கள் அனைவரும் பிரபல இந்திய உணவகம் ஒன்றில், பாரம்பரிய சிற்றூண்டி உண்டு மகிழ்ந்தார்கள். கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 



 

 


 

 

 

சிறுவர்ப் படைப்புப் பட்டறை

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறுவர்ப் படைப்புப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இரண்டு பாகங்களாக நடத்தப்பட்டது. முதல் பாகம் ஏப்ரல் முதல் தேதி அன்றும் இரண்டாம் பாகம் ஏப்ரல் எட்டாம் தேதி அன்றும் பள்ளி முடிந்து ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

மாணவர்கள் அந்தப் பட்டறையில் நாடகத்தின் கூறுகள் சிலவற்றையும் படைப்பாற்றல் திறன்கள் பற்றியும் கற்றுக்கொண்டார்கள். பட்டறையின் இறுதியில், மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒரு சில கதாபாத்திரங்களைப் போல் பாத்திரமேற்று ஒரு நாடகத்தை நடித்துக் காட்டினர். இப்பட்டறை மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பயனும் அளித்தது எனலாம். பட்டறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 

 

 

 

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

"இது எங்கள் உலகம்"

2013 மார்ச் 9ஆம் நாள் அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த "இது எங்கள் உலகம்" இருவாரத் தமிழ்மொழி முகாமில் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெற்றார்கள்.

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் முகாமில் பங்குபெற்ற தங்கள் அனுபவத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்தக் கருத்துரைகளைப் படித்துப் பாருங்கள்!

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழுக்குப் பெருமை சேர்த்த சிலர்..

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் 2013 தொடங்கிவிட்டன!


30 மார்ச் 2013 தொடக்கம் 28 ஏப்ரல் 2013 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு 01 ஏப்ரல் தொடக்கம் 13 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழி கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில் இன்று பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது, இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்று தொடக்கம், அடுத்த வாரம் சனி வரை (13/04/2013) தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் உள்ள தொடர்பினை நீங்கள் கிளிக் செய்து காணலாம்.

இவ்விரு வாரங்களின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.
  
தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்! 

 

 
 



 




வியாழன், 28 பிப்ரவரி, 2013

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 18/02/2013

இவ்வாண்டுக்கான முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல், சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் PAL அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.










அங்கு, அவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, பம்பரம் ஆகிய விளையாட்டுகள் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். தங்கள் குழுவுக்கென்று ஒதுக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டினை மாணவர்கள் விளையாடினார்கள். அவர்களுக்குத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் வழிகாட்டினார்கள். மொத்தத்தில், அன்றைய மாணவர்க்கூட்டம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.

 
 






 


சொற்போர் 2013 தேர்வுச்சுற்று

16/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2013 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்று தொடங்கியது. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். 

(ஜோஷிகா (6T), ஷாலினி (6T), ஜீவிதா (5O), டிவாஷினி (5R), அல்மீரா (5O))

'மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பணம் அவசியம்' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.

 
நம் பள்ளி மாணவி, ஜோஷிகா வர்மா (6T) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!

 

 

 

 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு'

இவ்வலைப்பூவில் அண்மையில் 'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு' என்ற வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில் தொடக்கநிலை 5 மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாக்களித்தார்கள். அதன் முடிவுகள் இதோ:
தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாகப் பல மாணவர்கள் ஆடுபுலி ஆட்டத்திற்கே வாக்களித்திருந்தார்கள். அவ்வகுப்பு மாணவர்களில் பலரையும் அவ்விளையாட்டு வெகுவாகக் கவர்ந்தது எனலாம்.

தமிழ்க் கருத்தறிதல் பட்டறை

22-01-2013 அன்று தொடக்கநிலை 5 மற்றும் தொடக்கநிலை 6 மாணவர்களுக்கு கருத்தறிதல் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஒன்றரை மணி நேரப் பட்டறையில் ஏன்’, ‘எவ்வாறுமுதலிய கேள்வி வகைகள் குறித்தும் அக்கேள்வி வகைகளுக்குப் பதிலளிக்கும் உத்திகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. இப்பட்டறையின்போது, மாணவர்கள் பகுதிகளிலிருந்து பதில்களை அடையாளம் காணுதல், அவற்றைக் கேள்வி வகைக்கு ஏற்ப பதிலளித்தல் முதலிய நடவடிக்கைகளில் தங்கள் குழுக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கருத்தறிதல் பட்டறையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: