வியாழன், 15 மார்ச், 2012

இரண்டாம் வகுப்புக்கான ‘நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன்’ முகாம்

கடந்த 09/03/2012 அன்று தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளியின் தாய்மொழிப் பிரிவு நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன் என்ற தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம் தொடக்கநிலை இரண்டாம் வகுப்பின் தாய்மொழிப் பாடவேளையின் போது நடைபெற்றது.

முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கைகளாக மாணவர்கள் சொல் மற்றும் வாக்கியம் உருவாக்கும் விளையாட்டு, துண்டுகள் இணைத்து எழுத்து உருவாக்கும் விளையாட்டு ஆகியவற்றில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 





 
















 







தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை என்றும் நேசிக்கும் வகையில் விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் அமைந்தன எனலாம்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 27/02/2012

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 27/02/2012 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல் சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் தாய்மொழி அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.


அங்கு, அவர்களுக்கு நூல்களைப் படிக்கும் பழக்கம் பற்றியும் அப்பழக்கத்தால் விளையும் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள ஒரு சில தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன.

 









 



அதனைத் தொடர்ந்து, தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவி ஷாலினி, தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஜோஷிகா, ஷாலினி ஆகிய மூவரும் தாங்கள் படித்த ஒரு கதையைப் பற்றிக் கூடியிருந்த மாணவர்களிடம் கூறினார்கள்.



 









இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களை வாசிக்கும் பழக்கத்ததிற்குத் தூண்டும் வண்ணம் அமைந்தது எனலாம்.

நூல் பல கல்.


திங்கள், 16 ஜனவரி, 2012

குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம்

சென்ற வியாழக்கிழமை 12-01-2012 அன்று, தொடக்கநிலை நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். அங்குப் பொங்கல் திருநாளை முன்னிட்டுப் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் பார்வைக்காக அங்கே கொண்டுவரப்பட்ட மாடுகளைக் கண்டு மாணவர்கள் பரவசம் அடைந்தனர். இப்பயணத்தில் பொங்கல் பற்றிய பல சுவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு, பொங்கல் செய்வது எப்படி என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். மேலும் அங்கு அவர்களுக்காகவே படைக்கப்பட்ட கிராமிய நடனத்தையும் மாணவர்கள் கண்டு களித்தனர். மொத்தத்தில் இந்தக் கற்றல் பயணம் நம் மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

இக்கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
 

 
 

 

வெள்ளி, 6 ஜனவரி, 2012

2012 தொடங்கிவிட்டது...

இனிய பல பசுமையான நினைவுகளுடன் 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

புதிய உத்வேகத்துடன் 2012-ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் எனப் பற்பல புதிய இலக்குகள் உங்கள் உள்ளங்களில் குடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

வெள்ளி, 25 நவம்பர், 2011

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!

24/11/2011 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் மிகச்  சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், 100 விழுக்காட்டு சிறப்புத் தேர்ச்சியும் பெற்று, தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.


வெள்ளி, 28 அக்டோபர், 2011

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, 25/10/2011 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது படைக்கப்பட்ட அங்கங்கள் அனைத்தும் பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்களும் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

நிகழ்ச்சியின் முதல் நடனமாகத் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவி, சினேஹா படைத்த பாரம்பரிய நடனம் அனைவரையும் ஈர்த்தது:


நிகழ்ச்சியின்போது டேவிட், டையனா, பிராயன், எல்வின் ஆகியோர் படைத்த விறுவிறுப்பான ஆட்டம் அனைவரையும் தாளம் போட வைத்தது.




நிகழ்ச்சியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் படைத்த துடுப்புமிக்க நடனமும்  அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.



பள்ளிக்கு வருகை தந்த 'பாங்கரா' (Bhangara) நடனக் குழு படைத்த இரண்டு ஆட்டம் போட வைக்கும் நடனங்கள்  நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன. அவர்களுடைய நடனங்கள் பள்ளியில் இருந்த அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தன.


பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் 'பாங்கரா' (Bhangara) நடனக் குழுவினர்களுடன் இணைந்து அந்நடனத்தை ஆட முற்பட்டனர். இது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


 நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


 





 













மொத்தத்தில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

வியாழன், 6 அக்டோபர், 2011

தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்!

தேர்வுகள் காலம் நெருங்கிவிட்டது.
உங்கள் நேரத்தை நல்வழியில் வகுத்து உங்களின் பாடத்திருப்பங்களை நல்ல முறையில் செய்திடுங்கள்.
உங்களின் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!
வெற்றி உங்களுக்கே! 

உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய எங்களுடைய இனிய நல்வாழ்த்துகள்!




Source (மூலம்):
Youtube - http://www.youtube.com/watch?v=SQZfA7X6FZ4)

சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

இன்று சிறுவர் தினம்.

தொடக்கநிலை ஒன்று முதல் தொடக்கநிலை ஆறு வரை பயிலும் எங்கள் மாணவச் செல்வங்களுக்குத் தமிழாசிரியர்கள் ஐவரின் இதயங்கனிந்த சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

திங்கள், 26 செப்டம்பர், 2011

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

 
தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.

'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புத்தான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.