செவ்வாய், 22 மார்ச், 2011

மாணவர்களுக்கான வளமூட்டும் வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் கைப்பாவைப் பயிலரங்கு
தொடக்கநிலை மூன்று & நான்கு மாணவர்கள் பேச்சு, நடிப்பு பயிலரங்கு
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் தன்னம்பிக்கை உரையாற்று பயிலரங்கு

மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள இவ்வகுப்புகள் நிச்சயமாகத் துணைபுரியும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 21/02/2011

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 21/02/2011 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தமிழ் மாணவர்கள் அனைவரும் Backspace அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குப் பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு மாணவர்களுக்கென புதிதாக வாங்கப்பட்ட சில புதிய கதைப்புத்தகங்களும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

















அதனைத் தொடர்ந்து, அப்துல் தஸ்லிம் என்ற தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவன் தான் படித்த ஒரு கதையைப் பற்றி கூடியிருந்த மாணவர்களிடம் கூறினான்.










இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களைப் பள்ளி நூலகத்தில் உள்ள கதைப்புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கத் தூண்டிய வண்ணம் அமைந்தது எனலாம்.


வாசிப்பை நேசிப்போம்!

சனி, 19 பிப்ரவரி, 2011

சொற்போர் 2011 தேர்வுச்சுறறு


19/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2011 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்றுகள் தொடங்கின. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தஸ்லிம் (5R), மணிகண்டன் (5O), ஜமீர் (5O), சபின் (6T), பாத்திமா (6R))

'கைத்தொலைபேசிகளால் அதிகத் தீமைகளே விளைகின்றன' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.












நம் பள்ளி மாணவி, பாத்திமா நாச்சியா (6 ரூபி) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!

வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதிய மின்கற்றல் தளம் ஆரம்பம்!

சென்ற திங்கட்கிழமை (24/01/2011), 'பழகு தமிழ்' என்ற புதிய மின்கற்றல் தளம் தொடக்கநிலை ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிகளை இணையத்தைப் பயன்படுத்திச் செய்ய இந்த மின்கற்றல் தளம் உதவுகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்ட பயிற்சிகளை வீட்டில் இருந்தபடி செய்யவும் முடிகிறது. பயிற்சிகளை மாணவர்கள் எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று ஆசிரியர்களால் கண்காணிக்கவும் முடியும். தொடக்கநிலை ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மின்கற்றல் தளம் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.


தமிழ்க் கற்பதைப் பயனுள்ளதாகவும் உள்ளத்திற்கு இன்பமூட்டுவதாகவும் அமைத்துக்கொள்ளப் 'பழகு தமிழ்' மின்கற்றல் தளம் பெரும் துணைபுரியும் என்பது திண்ணம்! 

சனி, 1 ஜனவரி, 2011

2011 வருக! வருக!

இனிய நினைவுகளுடன் 2010-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

புதிய உத்வேகத்துடன் 2011-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும்.

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!

25/11/2010 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தலை சிறந்த மாணவர் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதோடு, 267 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!

சென்ற ஆண்டினைப் போலவே, இவ்வாண்டும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், சிறப்புத் தேர்ச்சி விகிதத்தில் தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.


புதன், 10 நவம்பர், 2010

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, 04/11/2010 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது படைக்கப்பட்ட அங்கங்கள் அனைத்தும் பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்களும் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

நிகழ்ச்சியின் முதல் நடனமாகத் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:



நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விறுவிறுப்பான ஆட்டம் அனைவரையும் தாளம் போட வைத்தது.




நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பிற இன ஆசிரியர்கள் வழங்கிய நடனம் அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தது.




நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:






மொத்தத்தில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

வெள்ளி, 5 நவம்பர், 2010

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைத்து இந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்களது இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!

04/11/2010 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட படச்சுருள்கள் விரைவில் வலைப்பூவில் இடம்பெறவிருக்கின்றன....
அவற்றை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

தொடக்கநிலை 6 மாணவர்கள்

படத்தில் (பின் வரிசை - இடதிலிருந்து வலம்):
சௌந்தர்யா, ஃபாஸ்தினா, நிவாஷினி, அனிதா, ஷஹிரா, இர்ஃபான், முபாரக், கணேஷ், அமிருள்

படத்தில் (முன் வரிசை - இடதிலிருந்து வலம்):
ஜஸ்மினா, முனீரா, ஐநூன், ஷஹிடா, அர்ஷாத், அலீஃப், தௌஃபிக்

படத்தில் இடம்பெறாதவர்கள்:
அசினா, அயிஷா, யுவநித்தியா, ஹஃபிஸி, நேதாஜி


தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புதான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.